வியாழன், 3 டிசம்பர், 2009

போரில் தோற்றவனை விட வென்றவனே நிம்மதி இழப்பான்.


கௌதம புத்தர்.

செவ்வாய், 1 டிசம்பர், 2009

ஒரு பத்திரிக்கை நிருபரின் உண்மை அனுபவம்… யார் அகதி? .

ஒரு பத்திரிக்கை நிருபரின் உண்மை அனுபவம்.



யார் அகதி? வேறு கதியற்றவன், வசிக்க ஓர் இடமற்றவன், அழுவதற்கும் கண்களில் நீரற்றவன், உங்களால், என்னால் நிராகரிக்கப்பட்டவன்!
அழுது முடிந்த பிறகும் கன்னக்கதுப்புகளில் படிந்து இருக்கும் உப்பு நீர்க் கோடுகளைப் போல, ராமேஸ்வரத்து நிருபனாக நான் திரிந்த காலங்கள் மனதுக்குள் எழும்பி அடங்குகின்றன. சாகசச்செய்தி களின் பிரியன் நான். போர் நடக்கும் ஒரு பூமியில் இருந்து துப்பாக்கிக் குண்டுகளுக்குத் தப்பித்து அரசியல் தஞ்சம் கோரி வரும் இலங்கைத் தீவின் தமிழ் மக்களை ஆரம்பத்தில் சாகசக்காரர்களாகவே எண்ணினேன். ஆனால், காடுகளில் மறைந்து, கடலுக்குள் நீந்தி, இரு நாட்டுத் துப்பாக்கிகளுக்குத் தப்பித்து இந்தியப் பெருங்கடலைக் கடந்து வரும் அவர்கள் சாகசக்காரர்கள் அல்ல... பாவப்பட்ட மனிதர்கள்; சபிக்கப்பட்ட தமிழர்கள்!

ராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் மன்னார் பகுதிக்கும் இடையே மொத்தம் 7 மணல் திட்டுக் கள் இருக்கின்றன. இவற்றில் 4 திட்டுக்கள் பாது காப்பானவை. அதாவது, கொஞ்சம் பெரியவை. மற்ற மூன்றும் மிகச் சிறிய திட்டுக்கள். கடலின் நீரோட்டம் அதிகமானால் அந்தத் திட்டுக்கள் நீருக்குள் போய்விடும். போருக்கு முகம் கொடுத்து வாழும் மக்கள் உயிர் பிழைத்து படகு ஏறி வருகை யில் இந்தத் திட்டுக்களில் ஏதோ ஒன்றில்தான் இறக்கி விடப்படுகிறார்கள். ராமேஸ்வரத்தையும் தமிழகத்தையும் முன்னொருபோதும் பார்த்தறியாத மக்களை, 'அந்தா, ராமேஸ்வரம் கோயில் தெரியுது பாருங்க. இடம் வந்துடுச்சு... இறங்கிக்குங்க' எனச் சொல்லி, ஏதோ ஒரு மணல் திட்டில் இறக்கிவிட்டுச் சென்றுவிடுகின்றனர். யாருமற்ற சிறு மணல் திட்டில் தனித்துவிடப்படும் மக்கள், உப்புக் காற்றில் நா வறண்டு, வெப்பக் காற்றில் தேகம் சுருண்டுகிடப்பார்கள். கடலோரம் அமர்ந்து கண்ணீர் உகுத்து தம் தொப்புள் கொடி தேசத்தைநோக்கி 'எங்களை மீட்டுப் போங்களேன்' என இறைஞ்சுவதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழி இல்லை.
இந்தியக் கடற்படையினரோ, தமிழக மீனவர்களோ அந்தப் பக்கம் போனால் மட்டுமே அவர்கள் உயிர் பிழைத்துக் கரையேற முடியும். அப்படிப் படகு ஏதும் வரவில்லை என்றால், நாள் கணக்கில் யாருமற்ற மணல் திட்டுக்களில் காத்துக்கிடக்க வேண்டும்.
''இலங்கையில படகேறினா ஒரு மணி தியாலத்தில ராமேஸ்வரத்துக்கு வந்திட ஏலும். ஆனா, அந்தத் திட்டுக் களில் இருந்து வந்து சேரத்தான் ரெண்டு நாள், மூணு நாள், அஞ்சு நாள் என்டு ஆகும். அகதியா பிழைக்க வர்றேக்க கட்டுச்சோறாக் கட்டி எடுத்து வரப் போறம்? சோறு இருக்காது, குடிக்கத் தண்ணீர் இருக்காது, கடல் தண்ணீயை அள்ளிக் குடிச்சா தாகம் இன்னும் கூடும். என்ன செய்வது என்டு தெரியாமல் நாலா பக்கமும் சுத்திமுத்திப் பார்த்துக்கொண்டே இருப்பம். ஒதுங்க ஒரு நிழல் இருக்காது. சோறு இல்லாமல், தண்ணி இல்லாமல் தேகத்தில் தண்ணீர் வற்றிப்போய் அந்த மணல் திட்டுக் களிலேயே செத்துப்போன ஆக்களும் உண்டு''- பரமேஸ்வரன் என்ற பெயருடைய வெள்ளான் குளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் என்னிடம் சொல்லிக்கொண்டு வந்தார்.
'மதியக்கா'வைப் பற்றி அவர் விவரித்த கதைகள் ஒரு துர்க் கனவைப் போல இப்போதும் என் நினைவில் இருக்கிறது. மூன்று குழந்தைகளோடு தோணியேறியவள் மதியக்கா. அதில் ஒன்று கைக்குழந்தை. மணல் திட்டு ஒன்றில் மூன்றாம் நாள் காத்திருக்கையில், அவள் குழந்தை துவண்டது. சின்ன உதடுகள் காற்றில் அசைந்தன. தூரத்து ராமேஸ்வரத்துக் கடவுளை நோக்கிக் கூப்பிய கைகளை அவள் இறக்கவே இல்லை. மதியக்காவின் கண்களில் இருந்து கரகர வென வழிந்த கண்ணீர் நின்றிருந்தபோது, சிறு தளிரின் உயிர் பிரிந்திருந்தது. கூடி நின்றவர்களால் என்ன செய்ய இயலும்? அழுவதற்குக்கூட அப்போது யாரிடமும் கண்ணீர் இல்லை. அவள் கரங்களில் இருந்து வலுக்கட்டாயமாகக் குழந்தை பிடுங்கப்பட்டது வெள்ளைத் துணியன்றில் சுற்றி இந்தியப் பெருங்கடல் திட்டில் புதைத்தனர். மதியக்காவின் இரண்டாவதுபெண் குழந்தை துவண்டு மயங்கியபோது, 'என்னை விடுங்கோ... நான் ஆக்களை அழைச்சுக்கொண்டு வாரன்' என்று நெடுங்கடலை நோக்கி ஓடி விழுந்தாள். அலைகள் அவளை இழுத்தன. பின்னால் ஓடியவர் அவளைப்பிடிக் கும் முன்பு, அவள் தூரத்தே தெரிந்த ராமேஸ்வரம் நோக்கி நீந்தத் தொடங்கியிருந்தாள். நூறு அடிக்குப் பிறகு யாவரின் கண்களில் இருந்தும் மறைந்து போனாள். அன்று மாலை படகு வந்தது. வழி எங்கிலும் மதியக்கா வைத் தேடிய கண்களுக்கு இன்று வரை அவள்பிணமாக வேனும் கிடைத்தாளில்லை.
'இலங்கை அகதிகள் இத்தனையாவது திட்டில் காத்திருக்கிறார்கள்' என்று தகவல் வந்ததும், இந்தியக் கடற்படையின் படகுகள் அவர்களை ஏற்றிக்கொண்டு நேரே தனுஷ்கோடிக்குத்தான் செல்லும். அங்கு நேவி செக்போஸ்ட் சோதனை முடிந்ததும் தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷன். அங்கு சாதா போலீஸ் விசாரிக்கும். பிறகு, க்யூ பிராஞ்ச் போலீஸ். அதைத் தொடர்ந்து மத்திய உளவுத் துறை போலீஸின் விசாரணை. பசியாலும்மிரட்சியாலும் துவண்டு, மிரண்டு நிற்கும் மக்கள், மாலையில்தான் மண்டபம் முகாமில் ஒப்படைக் கப்படுவார்கள். அங்கும் சிலகட்ட விசாரணைகள் உண்டு.
'அகதி' என உறுதி செய்யப்பட்ட பிறகு, ஒரு குடும் பத்துக்கு இரண்டு போர்வைகள், இரண்டு பாய்கள், செலவுக்கு 100 ரூபாய் வழங்கப்பட்டு, முகாமுக்குள் அனுப்பப்படுவார்கள்.


''முகாமுக்குள் 'ஜெயில்' என்டொரு இடம் உண்டு. இலங்கையில் இருந்து வரும் ஆக்களில் யார் மேலயாவது 'புலி' சந்தேகம் வந்துட்டா, அதுக்குள்ளாறதான் அடைச்சு வைப்பினம். அது ஒரு போலீஸ் லாக்-அப் மாதிரி. சந்தேகம் வரலேன்னாலும்கூட இளம் வயசுப் பொடியள்கள் அதுக்குள்ளாற ஒரு சில நாட்களாவது இருந்துதான் ஆகணும். அதற்குப் பிறகுதான் எந்த முகாமுக்கு எங்களை மாற்றியிருக்கினம் என்டு ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தருவாங்கள். அதை எடுத்துக்கொண்டு ராமேஸ் வரம் பஸ் ஸ்டேண்டுக்குப் போய் பஸ் பிடிச்சு, அந்த முகாமுக்குப் போகணும்.''
அப்படி கோவில்பட்டி அருகில் உள்ள முகாமுக்கு அனுப்பப்பட்ட இலங்கை- திரிகோணமலை பகுதியைச் சேர்ந்த முதியவரின் பெயர் ராசு. 65 வயதில் தன்னந் தனியாகத் தோணியேறி அகதியாக வந்த ராசு, முகாமுக்குள் நுழைந்த உடனேயே சந்தித்த மகிழ்ச்சியின் தருணங்கள், அடுத்த நாள் நான் அவரை சந்திக்கும்வரைக்கும் அவர் முகத்தில் மிச்சம் இருந்தது. ஒரு கலவர காலத்தில் இந்தியப் பெருங்கடலின் இரு பக்கமும் ஆளுக்கு ஒருவராகப் பிரிக்கப்பட்ட ஒரு தம்பதியர் 16 வருடங்கள் கழித்து, வாழ்வின் அந்திமக் காலத்தில் கரம்கோத்த நெகிழ்ச்சி நிமிடங்கள் அவை.
ராசுவின் மனைவி சுப்பம்மாள், 16 வருடங்களுக்கு முன்பு அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். கணவன் எங்கே இருக்கிறார், இருக்கிறாரா, இல்லையா என்பதே தெரியாமல் சுப்பம்மாள் வாழ்க்கையைக் கடத்திய அதே கோவில்பட்டி முகாமுக்கு கணவரையும் அகதியாக்கி அனுப்பிவைத்தது காலம்.
கோபம் என்பது ஓர் அகதிக்கு இருக்கக் கூடாத உணர்ச்சியாக வரையறுத்துவைத்திருக்கிறது நம் ஊர். எதற்காவது கோபப்பட்டு ஓர் அகதி தமிழ்நாட்டு ஆட்கள் யாரையாவது அடித்துவிட்டால், திட்டிவிட்டால், அகதியின் பக்கம் முழு நியாயம் இருந்தாலுமே, 'பொழைக்க வந்திருக்கிற உனக்கே இவ்வளவு திமிரா..?' என்று உடனடி எதிர்ப் பேச்சு வருகிறது. 'நீங்கள் இந்த நாட்டின் இரண்டாம் தரக் குடிமக்கள்' என எல்லாக் கணப்பொழுதிலும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இலங்கைத் தமிழினம் தமிழகத்தில் 'சொரணை' இல் லாமல் வாழ நிர்பந்திக்கப்படுகிறது.
சிங்கள ஓநாய் ராணுவம் என்கிறோம்... அரக்கன் ராஜபக்ஷே என்கிறோம்... ஆனால், இங்கே தமிழகத்தில், அகதிகள் என்ற பெயரில் தவிக்கும் அபலைகளை நாம் எப்படி நடத்துகிறோம் நண்பர்களே?

‘A’ FOR APPLE



‘A’ FOR APPLE
 

‘B’ FOR BISCUIT
 
‘C’ FOR CHOCOLATE

'திருப்பிச் சொல்லுங்க ' என்ற
டீச்சரைப் பார்த்து சொன்னாள்
மூன்று வயது செல்லம்மா
"பசிக்குது மிஸ்".






எனகென்று ஒரு இருப்பிடம் தேடி
எங்கெங்கோ அலந்தேன்.
எங்கும் கிடைக்கவில்லை
என்ன செய்வதென்று தெரியாமல்
கடவுளை நோக்கி கடுந்தவம் இருந்தேன்.
கடவுளும் வந்தார் "மூடனே என்ன வேண்டும் என்றார்"

நானும் என் கோரிக்கையை வைத்தேன்.
கடகடவென சிரித்த கடவுள்
உன் பெயரென்ன என்றார்.
சொன்னதும் சில நிமிடம் யோசித்து
உனக்கேற்ற இடமென்று அனுப்பி வைத்தார்.

அனுப்பிய இடம் - இந்தியா
என் பெயர் - ஊழல்
ரணில் தூங்கும் காதல்
அவனுக்காக நான் எழுதிய காதல் கடிதங்கள்
இப்பொதும் என் வீட்டு மொட்டை மாடியில்
குட்டிப் பரணில் உறங்கிக் கிடக்கிறது - அவன்
நினைவுகளை சுமந்த படி
மீண்டுமொரு முறை அதை படித்து பார்க்க ஆசை
எழுந்து போக எத்தனிக்கையில்
தூளியிலிருந்து வெளிப்பட்டது என்
ஆறு மாதக்குழந்தையின் அழுகுரல்
நிகழ்ந்து விட்ட திருமணத்தின் நிதர்சனமாய்..

"ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால், உயிரினும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கெளரவம்"





இந்த வலைப்பதிவில் தேடு